ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீடு மற்றும் 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் நிதி முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார், என இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சந்தீப் கோஷ் கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியிருந்தார்.தேர்ச்சி பெற லஞ்சம்: மேலும் மருத்துவ மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பணம் வசூலித்தார் எனவும் கூறியிருந்தார்.இது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்தாண்டு ஜூலையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டி ருந்தது. இந்த ஊழல் புகாரையும்சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இதைடுத்து சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து, அவரது வீடு உட்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
9 முக்கிய ஆதாரங்கள்: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கொல்கத்தா போலீஸார் 53 பொருட்களை சேகரித்தனர். இதில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராயின் உடைகள், உள்ளாடைகள், செருப்பு, பைக் மற்றும் ஹெல்மட் உட்பட 9 பொருட்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன. செல்போன் தரவு, செல்போன் டவர் இருப்பிடம், மருத்துவமனை வளாகத்தின் 2 சிசிடிவி கேமிரா பதிவுகள் டிஜிட்டல் ஆதாரங்களாக உள்ளன. இவை தவிர தடயவியல் அறிக்கைகளும் விரைவில் வெளிவரவுள்ளன. அவையும், இந்த கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் எனத் தெரிகிறது.
குற்றவாளியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், கொலை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் போன்றவை மருத்துவ அறிக்கைகளாக கிடைக்கும். இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, இந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும் என கூறப் படுகிறது.