உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை

0
22

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின.

இந்த சுற்றில் கலந்துகொண்டுள்ள 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய ஆடவர் அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜெண்டினா அணிகளும் உள்ளன.

இந்நிலையில் 2-வது சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஆட்டத்தை வலுவாகத் தொடங்கினாலும் அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழப்பது பலவீனமாக உள்ளது.

லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3-0 மற்றும் 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோதிலும், எதிரணி மீண்டு வர வழியமைத்து இறுதியாக 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் பாதியில் 2-1 என முன்னிலையில் இருந்த இந்திய அணி அதன் பின்னர் 3 கோல்களை விட்டுக்கொடுத்து 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

மறுபுறம் நெதர்லாந்து அணி தனது லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. நியூஸிலாந்தை 5-1 என்ற கோல் கணக்கிலும், அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கிலும், ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து அசத்தியிருந்தது நெதர்லாந்து அணி.

உலக ஹாக்கி அரங்கில் மிகவும் ஆபத்தான தாக்குதல் ஆட்டம் விளையாடும் அணிகளில் ஒன்றாக நெதர்லாந்து திகழ்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here