ஆடு மேய்த்தவனை நாடு போற்றிய கதை! – ‘மகாகவி காளிதாஸ்’ 60 ஆண்டுகள்

0
27

1931 முதல் தமிழில் பேசும் படங்கள் வெளியாகத் தொடங்கினாலும் அவை அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைய துவங்கியது 1950களின் துவக்கத்தில் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்விற்கு முன்னெடுப்பாக விளங்கின என்பதும் உண்மை.

சிவாஜி படங்கள் சமூக சீர்திருத்தம் மட்டுமே பேசியது என்பது மேலோட்டமான பார்வை. தமிழின் தொன்மையையும், செழுமையையும் ஆழத்தையும் பாமரனுக்கும் தனது வசன உச்சரிப்பு மூலமாகக் கடத்தியவர் சிவாஜி. அதற்கு அடுத்த கட்டமாகப் படித்தும் கேட்டும் மட்டுமே அறிந்த புராண தேவர்கள் முதல் இதிகாச நாயகர்கள் வரை, சுதந்திர தியாகிகள் முதல் தேசத் தலைவர்கள் வரை, மாமன்னர்கள் முதல் மகாகவிகள் வரை திரையில் உருவகப்படுத்தியவர் நடிகர் திலகம்.

வடமொழியில் காவியங்கள் படைத்த முதன்மையானவர்களில் ஒருவர் காளிதாசன். ஆடு மேய்க்கும் சின்னையா காளி அருள் பெற்று காளிதாசனாக மாறி காப்பியங்கள் படைத்தான். அவனைத் திரையில் சிவாஜி காட்சிப்படுத்திய விதம் பிரமிப்பு.

நண்பனின் தங்கை கல்யாணத்திற்குப் போகக் குறிப்பாக அங்கே விருந்துண்ண அவர் காட்டும் துடிப்பு சிறப்பு என்றால் காளியே மூதாட்டி உருவில் வந்திருக்கிறாள் என்பது புரியாமல் அவள் கேட்கும் லட்டை கூட கொடுக்க மனம் வராமல் மிகச் சிறிதான தூளைக் கொடுத்து பிக்கவே வரமாட்டேங்குது என்பது ரசனையான வடிவமைப்பு. நுனிக் கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டும் அளவிற்கு அப்பாவியை அரசவை புலவர்கள் பெரும் அறிவாளி என்று அரசரை ஏமாற்றி இளவரசிக்கு மணம் முடித்து விட முதலிரவில் அவரின் அப்பாவித்தனம் வெளிப்படும் கட்டங்கள் கலவையான சுவை

உப்பரிகையில் நின்று அருகில் தெரியும் நிலாவைப் பார்த்து வீட்டுக்குள்ளேயே நிலாவை வச்சிருக்காங்க என்பதும் அலங்காரத்திற்குத் தொங்க விடப்பட்டிருக்கும் துணிகளில் ஒன்றை அம்மாவிற்கு கொடுக்கணும் என்று எடுத்து வைத்துக் கொள்வதும் சிரிப்பையும் சங்கடத்தையும் தரும். உண்மை தெரிந்து கலங்கும் இளவரசியிடம் நீ அழாதே நான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து உனக்குக் கஞ்சி ஊத்தறேன் என்று சொல்லும் போது மனம் நெகிழ்ந்து போகும்.

சின்னையா காளிதாசனாக மாறியவுடன் உடல் மொழியில் வரும் கம்பீரம், நிமிர்ந்த தோள்கள், அறிவின் தேஜஸ் மின்னும் முகம், போலி புலவனாக நுழையும் போது காட்டும் நடைக்கும், காளி அருள் பெற்றவுடன் கோவிலிலிருந்து வெளியே வரும் ராஜ நடைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்! எந்த போஜ மன்னன் ஆதரவினால் சாகுந்தலம், ரகு வம்சம் மேக ஸந்தேஸம் என்ற காப்பியங்கள் உருவானதோ அதே மன்னன் தன்னிடம் மரண கவி பாட சொல்லும் போது வெளிப்படும் உணர்ச்சி பிரவாகம் ஒரு பரிமாணம் என்றால் மூதாட்டி (காளி) தன்னை பற்றிப் பாடும்போது சிவாஜியின் முகம் காட்சிப்படுத்தும் கையறு நிலை மற்றொரு பரிமாணம்.

முத்துராமன், சௌகார், நாகேஷ், மனோகர், வி கே ராமசாமி வழக்கம் போல ஆனால் வழக்கத்திற்கு மாறான அன்பான சி கே சரஸ்வதி கவனம் ஈர்ப்பார். கு.மா பாலசுப்ரமணியனின் திரைக்கதை வசனம் கச்சிதம். கண்ணதாசனோடு சேர்ந்து சில பாடல்களும் எழுதினார் கு’மா பா.கே வி மகாதேவனின் இசையில் பாடல்கள் பிரபலம். நடிகர் திலகம் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது பொதிகை தொலைக்காட்சியில் இந்த படத்தில் இடம் பெற்ற யார் தருவார் இந்த அரியாசனம் ஒளிபரப்பப்பட்டது என்பது சுவையான செய்தி.

ஒளிப்பதிவாளர் ஆர்ஆர் சந்திரன் ஒளிப்பதிவோடு இந்தப் படத்தின் இயக்கத்தையும் கையாண்டிருந்தார்.

திரைப்படங்களை வணிக ரீதியாக மட்டுமே வகைப்படுத்தாமல் கலை வடிவங்களாகப் பார்க்கும்போது காலத்தால் அழியாத காவியங்கள் தந்த காளிதாசனை திரையில் வடித்த இந்தப் படமும் காலத்தால் அழியாதது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here