பொதுமக்கள் எதிர்ப்பால் துல்லிய சொத்து வரி மதிப்பீட்டை நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு அதிக வருவாய் இதன் மூலமே கிடைக்கிறது.
ஏற்கெனவே சொத்து உரிமையாளரின் சுயமதிப்பீடு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு துல்லிய சொத்து வரி மதிப்பீட்டை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதில் குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துக்கு மறுமதிப்பீடு செய்து, அவர்களுக்கு மட்டும் மாநகராட்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனிடையே, சுமார் 10 மடங்குக்குமேல் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் 100 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்திருந்தார். மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவும், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், துல்லிய சொத்துவரி மதிப்பீட்டை நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேற்றிரவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான வரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.
இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன. இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்திவைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவுக்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கெனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.















