டைமண்ட் லீக் தொடர்: 89.49 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

0
202

சுவிட்சர்லாந்தின் லாசன் நகரில் டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாரிஸ்ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார். இந்தசீசனில் அவரது சிறப்பான செயல்திறனாக இது அமைந்தது.

4-வது வாய்ப்பு வரை நீரஜ் சோப்ரா 4-வது இடத்தில்தான் இருந்தார். 5-வது முயற்சியில் 85.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து கடைசி முயற்சியில் அவர், 89.49 மீட்டர் தூரம் எறிந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். தற்போது அதைவிட சற்று கூடுதல் தூரம் எறிந்துள்ளார்.இரு முறை உலக சாம்பியனும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றவரான கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.08 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். டைமண்ட் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் நீரஜ் சோப்ரா, ஜூலியன் வெபர் ஆகியோர் தலா 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 21 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ்ச் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.டைமண்ட் லீக் தொடரின் அடுத்த கட்ட போட்டி வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஜூரிச் நகரில் நடைபெறுகிறது. இதன் முடிவில் ஒட்டுமொத்தமாக புள்ளிகள் பட்டியலில் முதல் 6இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள். இறுதிப் போட்டி செப்டம்பர் 14-ம்தேதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா இதுவரை முதலிடத்தை கைப்பற்றவில்லை. கடந்த மே மாதம் தோகாவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் 2-வது இடத்தையே பிடித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here