“தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டினார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும். தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது. தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
கபினி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. அணையின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளோம். எனவே கன்னட அமைப்பினர் இதை எதிர்த்து போராட வேண்டாம். ஆக.13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம்.
காவிரி நீர் பிரச்சினையை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டும். கடவுள் ஆசியால், ஜூலை 31 முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் 68,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
4 அணைகளிலும் 57 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவை, கர்நாடக விவசாயிகளின் பாசன தேவை ஆகியவற்றுக்கு இந்த நீர் பயன்படுத்தப்படும்
காவிரி நீர் பிரச்சினைக்கு மேகேதாட்டு அணையே இறுதி தீர்வு. அந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவை விட, தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். மேகேதாட்டு திட்ட அறிக்கையில் உள்ள சிறிய தவறுகளை சரி செய்து விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.
எனக்கு இரு மாநில விவசாய நலனும் முக்கியம். நாமெல்லாம் ஒன்றுபட்ட இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்” என்றார்.
பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்.
அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியல் ரீதியாக எங்களுக்கிடையே வேறுபாடு இருந்தாலும், அவர் பெங்களூரு வருவதாக கூறியதை மனதார பாராட்டுகிறேன்.
சுமுகமான சூழலில் முதல்வர் விஜய்யை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்பதாலே அந்த சந்திப்பை தள்ளிவைக்குமாறு கேட்டேன். எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்ப மாட்டேன்” என்றார் டி.கே.சிவக்குமார்.















