குடிநீர் பிரச்சினை – காலி குடங்களுடன் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

0
23

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரைப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, கிராம மக்கள் (திங்கள் கிழமை) இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரைப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் 7 தெருக்களுக்கும் வழக்கமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அன்றாட தேவைகளுக்குத் தேவையான குடிநீரைக் கூட பெற முடியாமல் கடும் அவதியடைந்து வருவதாக கூறினர். தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், பல கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று குடிநீர் சேகரித்து வர வேண்டிய சூழலும் நிலவுவதாக” தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்து அரைப்பாக்கம் ஊராட்சி மன்றம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய கிராம மக்கள், காலி குடங்களை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், அரைப்பாக்கம் கிராமத்திற்கு உடனடியாக சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவைப் பெற்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here