டாஸ்மாக் நிறுவனத்தில் ஒப்பந்தப் புள்ளி, போக்குவரத்து செலவு, போலி ரசீது, பழைய பாட்டில்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது என பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது:
டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கான ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும்போது, சிலருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அந்த நபர்களுக்கு ஆதரவாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
சில இடங்களில் மதுபானக் கூட ஒப்பந்தத்தில், சிலர் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஒரு வங்கியில் தொடர்ச்சியான வரிசை எண்களை கொண்ட கேட்பு வரைவோலைகளை (டிடி) வழங்கியுள்ளனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,கரூர் மாவட்டங்களில் மொத்தம் 857 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் இருந்தாலும், 284 மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த 284 மதுபானக் கூடங்களும், தங்களது உரிமத்தை வழங்காமல் தொடர்ந்து இயங்கின. அரசு விதிப்படி, மாதாந்திர டிடி வழங்கப்படவில்லை என்றால், அந்த மதுபானக் கூடம் மூடப்பட்டு புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல், சட்டவிரோதமாக மதுபானக் கூடங்கள் இயங்கின. இதனால் அந்த மாவட்டங்களில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 2022-23-ம் ஆண்டுகளில் கோவை வடக்கு மாவட்டத்தில் ரூ.17.27 கோடி, கோவை தெற்கு மாவட்டத்தில் ரூ.13.58 கோடி, நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.96 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. மதுபானக் கடைகளுக்கு சரக்குகளை கையாளுவதற்கு கோரப்படும் போக்குவரத்து துறையிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்துக்கு ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. இதிலும் முறைகேடு நடந்துள்ளது. மதுபானக் கூடத்தை ஒப்பந்தம் பெற்ற நபர்களே நடத்தாமல், மூன்றாம் நபர்கள் நடத்தினர். சிலர் பணத்தை செலுத்தி டிடி எடுத்து, வேறு ஒருவர் பெயரில் ஒப்பந்தம் எடுத்துவிட்டு, இறுதியில் மற்றொருவர் பெயரில் மதுபானக் கூடத்தை நடத்தியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மூலனூர் எஸ்.கார்த்திக் மற்றும் ‘கரூர் கேங்’ என்ற அதிகார கும்பலும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கூடங்களையும் நடத்தியுள்ளன. இந்த கும்பல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. ‘பார்ட்டி ஃபண்ட்(கட்சி நிதி)’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கூட உரிமையாளர்களிடம் ‘கரூர் கேங்’, பெரும் தொகையை வசூல் செய்துள்ளது.
இதேபோல பழைய மதுபாட்டில்களை பெறுவதிலும் மதுபான நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக போலி ரசீதுகளை வழங்கியும், பழைய பாட்டில்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தும் இந்த முறைகேடு நடந்துள்ளது.
டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் ஐஏஎஸ், சில மதுபான நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாகத்தில், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான ரதேஷ் ராஜ் சண்முகவேல் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். பெரிய அதிகார மையமாக செயல்பட்டுள்ளார் இவரே எந்த நிறுவனத்தில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்ய வேண்டும், மதுபானக் கூட உரிமம் வழங்குவது, அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்து முடிவு எடுத்துள்ளார்.
மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக வசூலித்து முறைகேடு நடந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் ஒரு மதுபாட்டிலுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.500 வரை வசூலிக்கப்பட்டுள்ளது என்று எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.















