திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (ஜூலை 28) நடைபெற உள்ளது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள தவெகவின் முதல் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக கொறாடா எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், ‘‘எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பட்ஜெட் தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
இதில் எம்எல்ஏக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த அறிவிப்பானது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
ஏனெனில், திமுக வரலாற்றில் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல் முறையாக கட்சியின் தலைவர் தலைமையின்றி நடத்தப்படவுள்ளது. இதற்கு முந்தைய எம்எல்ஏ கூட்டங்கள் பெரும்பாலும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் நடைபெறும்.
கூட்டத்துக்கான அழைப்பும் வழக்கமாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் விடுக்கப்படும். ஆனால், நேற்றைய அறிவிப்பை கொறாடா எவ.வேலு வெளியிட்டிருந்தார்.
இதன்மூலம் சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒருங்கிணத்து வழிநடத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் முழுமையாக தன் கைவசப்படுத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.















