காமராஜர் காலை உணவு திட்டத்தில், 3 ஆண்டு உணவு தயாரிப்புக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ம் அண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தவெக அரசு பொறுப்பேற்ற பின் ‘பெருந்தலைவர்
காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டு, விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், 3 மாநகராட்சிகளில் உள்ள 3 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள 113 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி, காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான தகுதி வாய்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், நகர் அல்லது பகுதிவாரியான குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சமுதாய சேவை குழுக்கள், துவக்க நிலையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது.
இப்பணிக்கான குறைந்தபட்ச மதிப்பு ரூ.37 லட்சம் என்றும், அதிகபட்ச மதிப்பு ரூ.9.20 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தபுள்ளிக்கான ஆவணங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் வரும் 27-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒப்பந்ததாரர்களுக்கான முன் கலந்தாய்வுக் கூட்டம் வரும் ஆக. 3-ம் தேதி காலை 11 மணியளவில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி வளாகங்களில் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை ஆக.14-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















