ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக பதவி பறிப்பு: அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

0
16

​ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். யாராக இருந்தாலும், தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள், மருத்துவமனைகளில் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. ரீல்ஸ் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறை வாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, நடப்பு 2026-27-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களைக் கவரும் திட்டங்கள் அதிகம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையே, பட்ஜெட் தயாரிப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய தொழில் முதலீடுகள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியஅறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்றக் கூடியவை, மகளிர்உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் சில திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.‘தவெக அரசு ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் லஞ்சம், முறைகேடு குறித்த புகார்கள் வராதபடி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும். இதில் அமைச்சர்கள் உறுதியாக இருப்பதுடன், தங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளை தொடர்ந்துகண்காணிக்க வேண்டும்.

சிறிய முறைகேடுகளுக்கும் இடம் அளிக்கக் கூடாது. இதை மீறி அமைச்சர்கள் அல்லது அவர்களது துறைகள் தொடர்பாக ஊழல், முறைகேடு உள்ளிட்ட புகார்கள் வந்தால் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு உறுதியானால் சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பார்க்க மாட்டேன். யாராக இருந்தாலும், தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு முழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

அமைச்சர்கள் தங்களது துறைதொடர்பாகவும், மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அதேநேரம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைச்சர்கள் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட விளம்பர நோக்கிலான பதிவுகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அமைச்சர்கள் மாவட்டங்களுக்கு செல்லும்போது பொதுமக்களிடம் பொறுப்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

அமைச்சர்களா, மக்களா.. யார் முக்கியம் என்றால், எனக்கு மக்கள் தான் முக்கியம் என்று சொல்வேன். மக்கள் என்னை நம்பி தேர்வு செய்து இங்கு அனுப்பி உள்ளனர். அவர்களுக்குப் பணி செய்யவே நான் வந்துள்ளேன். என்னைத்தான் நீங்களும் பின்பற்ற வேண்டும். செயலில் காட்டுவது முக்கியம்

‘மக்களுக்கு நல்லது செய்வோம்’ என்று வெறுமனே மேடையில் பேசிவிட்டுச் செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. எதுவும் பேச்சளவில் இருக்க கூடாது. செயலில் காட்டுவது முக்கியம். மக்களுக்குத் தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும். நமது அரசு ‘க்ளீன் கவர்மென்ட்’ ஆக இருக்க வேண்டும்’ என்று முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சில அமைச்சர்கள் ஆய்வின்போது எழுந்த சர்ச்சைகள், பள்ளிகளில் நடைபெற்ற சில நிகழ்வுகள் தொடர்பான புகார்கள் பின்னணியில் இத்தகைய அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here