ஐரோப்பிய ஜாம்பவான்களின் கனவுப் போர்: பிரான்ஸ் – ஸ்பெயின் நாளை பலப்பரீட்சை | FIFA WC 2026

0
18

ஒரு மாத காலமாக உலகம் முழுவதையும் கால்பந்து காய்ச்சலில் ஆழ்த்திய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. இறுதிக்கட்டத்தின் முதல் அத்தியாயமாக, உலகக் கால்பந்தின் ஐரோப்பிய வல்லரசுகளான ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் அரை இறுதி சுற்றில் நாளை (15-ம் தேதி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

கால்பந்தின் பழைய மரபையும், நவீன வேகத்தையும் இணைத்து விளையாடும் ஸ்பெயின் அணியும், உடல் வலிமை, அதிவேக எதிர்தாக்குதல் மற்றும் தனிநபர் திறமையை ஆயுதமாகக் கொண்ட பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதும் இந்தப் போட்டி உலகக் கால்பந்தின் அடுத்த ஆதிக்க சக்தி யார் என்பதை நிரூபிக்கும் மேடையாகவும் பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. லீக் சுற்றில் செனகலை 3–1 என்ற கோல் கணக்கிலும் இராக்கை 3–0 என்ற கோல் கணக்கிலும், நார்வே அணியை 4-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் சுவீடனை 3–0 என்ற கோல் கணக்கிலும், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை 1–0 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதி சுற்றில் மொராக்கோ அணியை 2–0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

தாக்குதலிலும், டிஃபென்சிலும் சமநிலையுடன் செயல்பட்டுள்ள பிரான்ஸ் அணி, தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டியில் கால்பதிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணி கடந்த 2018 மற்றும் 2022-ம் ஆண்டு தொடர்களிலும் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. மறுபுறம் லூயிஸ் டெலா ஃபுவென்டே தலைமையிலான ஸ்பெயின் அணி லீக் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் கேப் வெர்டே அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்த போதிலும் அடுத்த ஆட்டங்களில் சவுதி அரேபியாவை 4–0 என்ற கோல் கணக்கிலும் உருகுவேவை 1–0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் சாய்த்த ஸ்பெயின், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலை 1–0 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதி சுற்றில் பெல்ஜியத்தை 2–1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதி சுற்றில் கால்பதித்தது. இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்திருப்பது அந்த அணியின் தற்காப்பு வலிமையை வெளிப்படுத்துகிறது.

தற்போது நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டி பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே, ஸ்பெயினின் லாமின் யமால் ஆகிய இரு தலைமுறை நட்சத்திரங்களின் மோதலாகவும் பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் ஏற்கெனவே சாதனைகளை படைத்து வரும் எம்பாப்பே, பிரான்ஸின் தாக்குதலின் முக்கிய ஆயுதமாக திகழ்கிறார். நடப்பு தொடரில் அவர், 8 கோல்களை அடித்து அசத்தி உள்ளார்.

மறுபுறம் ஸ்பெயின் அணியில் இளம் வீரர் லாமின் யமால் தனது வேகம், டிரிப்ளிங் திறன் மற்றும் படைப்பாற்றலால் எதிரணிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். மத்திய களத்தில் ரோட்ரி, பெட்ரி ஆகியோரின் பந்துக் கட்டுப்பாடு ஸ்பெயினுக்கு மிகப்பெரிய பலமாகும். அவர்கள் ஆட்டத்தின் வேகத்தை நிர்ணயிக்கும் திறன் கொண்டவர்கள். அதே நேரத்தில் பிரான்ஸின் ரபியோ, மனு கோனே ஆகியோர் எதிரணியின் பாஸிங் ஆட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் பெற்றவர்கள். எனவே மத்தியக்களப் போராட்டமே இந்த மோதலில் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கலாம்.

தாக்குதலில் உஸ்மான் டெம்பலே, மைக்கேல் ஒலீஸ், டெசிரே டூயே ஆகியோருடன் கிலியன் எம்பாப்பே இருப்பது பிரான்ஸ் அணியை அபாயகரமான அணியாக மாற்றி உள்ளது. அதேவேளையில் லாமின் யமால், நிகோ வில்லியம்ஸ், டானி ஒல்மோ, மிக்கேல் ஒயர்சபால் ஆகியோரின் வேகமான இணைப்பு ஸ்பெயினின் தாக்குதலுக்கு கூடுதல் கூர்மையை வழங்குகிறது.

இரு அணிகளும் சமீபத்தில் மோதிய ஆட்டங்களில் ஸ்பெயின் கை சற்று மேலோங்கி இருந்தது. 2024-ம் ஆண்டு யூரோ கோப்பை அரையிறுதியிலும், அதன் பின்னர் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் மோதலிலும் பிரான்ஸ் அணியை ஸ்பெயின் வீழ்த்தியுள்ளது. இந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க பிரான்ஸ் ஆயத்தமாக உள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் ஸ்பெயின் களமிறங்குகிறது.

பந்தைக் கட்டுப்படுத்தி பொறுமையாக வாய்ப்புகளை உருவாக்கும் ஸ்பெயின் பாணிக்கும், அதிவேக எதிர்தாக்குதலால் போட்டியை மாற்றும் பிரான்ஸ் பாணிக்கும் இடையேயான இந்த மோதல் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

ரீவைண்ட்

உலகக் கோப்பை வரலாற்றைப் பார்த்தால், இரு அணிகளும் மிகக் குறைவாகவே நேருக்கு நேர் மோதியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியிருந்தது.

விளையாடும் பாணி எப்படி?

ஸ்பெயின் வழக்கம்போல அதிக நேரம் பந்தை வைத்துக்கொண்டு பொறுமையாக தாக்குதலை உருவாக்கும். இரு விங் பகுதிகளிலும் வேகமான ஓட்டங்கள், குறுகிய பாஸ்கள், தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் ஆட்டமே அவர்களின் அடையாளம். பிரான்ஸ் அணியோ வேறு பாணியில் செயல்படும்.

பந்தைக் கைப்பற்றிய உடனே அதிவேக எதிர்தாக்குதலுக்கு மாறி, எம்பாப்பே மற்றும் டெம்பலேவின் வேகத்தை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கும். குறிப்பாக ஸ்பெயின் பாதுகாப்பு வரிசைக்குப் பின்னால் கிடைக்கும் இடைவெளிகளைப் பயன்படுத்துவதே பிரான்ஸின் முக்கிய திட்டமாக இருக்கக்கூடும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here