நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு முகாம்கள் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வினேஷ் போகத் தயாராக இருந்தார். ஆனால், ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி, ஓய்விலிருந்து திரும்புபவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் தடைவித்தது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, வினேஷ் போகத் தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க வினேஷுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எங்களால் எதையும் செய்ய இயலாது.
நீங்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறுவது முறையாக இருக்காது. இவர் (வினேஷ் போகத்) நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்த முறை மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. இவ்வாறு அதில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வினேஷ் போகத்தின் மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், தனது பங்கேற்பை எதிர்த்து மல்யுத்த சம்மேளனம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு வினேஷ் போகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று (மே 30) நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதித் தேர்வில் வினேஷ் போகத் பங்கேற்கவுள்ளார்.















