ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் சீனியர் நட்சத்திரமான ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்துத் துறைகளிலும் வலுவான வீரர்களைக் கொண்ட ஒரு முழுமையான அணியாகத் மும்பை இந்தியன்ஸ் தெரிந்தது. 13 சீசன்களுக்குப் பிறகு முதல் முறையாகத் இம்முறை தங்களது தொடக்க ஆட்டத்தில் அந்த அணி வெற்றி கண்டிருந்தது.
ஆனால் அதன் பின்னர் எதிர்பார்த்த அளவிற்குச் சிறப்பாக விளையாடாமல் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே மும்பை அணி செயல்பட்டு வருகிறது. இந்த சீசனில் அவர்களது சரிவுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பவர்பிளேவில் சிறப்பாக செயல்படாததே முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இதை சரிசெய்வதில் மும்பை அணி தீவிர கவனம் செலுத்தக்கூடும். இதுவரை விளையாடி விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளே கட்டத்தில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கச்சிதமாகச் செயல்பட்டாலும் நடப்பு தொடரில் அவர், ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.
பேட்டிங்கிலும் பவர்பிளேவில் மும்பை அணி முழு வேகத்துடன் செயல்படவில்லை. பெரும்பாலான அணிகள் பவர்பிளே பீல்டிங் கட்டுப்பாடுகளைச் சாதகமாக்கிக் கொண்டு வலுவான அடித்தளத்தை அமைக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் மும்பை அணியால் தொடக்கத்திலேயே ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. இதனால் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்ட மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான நெருக்கடி ஏற்படுகிறது. எனினும் அவர்களும் இதுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் அடித்திருந்தாலும், திலக் வர்மா ரன்கள் சேர்க்க போராடி வருகிறார். அவர், நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் முறையே 20, 0, 14 மற்றும் 1 என மிகக் குறைந்த ரன்களையே எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க தங்களுடைய திட்டங்களைச் மும்பை அணி களத்தில் சரியாகச் செயல்படுத்த முடியாததே தொடர்ச்சியாக அடைந்த 3 தோல்விகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பேட்டர்களுக்கு ஏதுவான பந்துகளைத் தொடர்ந்து வீசி அவற்றை சிக்ஸர்களாக மாற்ற வழிவகுத்தனர்.
அதே சமயம், மும்பை பேட்டர்கள் பவர்பிளே ஓவர்களில் சுமாராகச் செயல்பட்டதால், ஆட்டத்தின் பிந்தைய கட்டத்தில் அவர்களால் அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கிப் போராட முடியாமல் போனது. எனவே ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டுமென்றால் மும்பை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் கிஸ் மட்டுமே. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 7 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தொடக்க வீரர்களான பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி கடைசியாக ஹைதராபாத் அணிக்கு ஏதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் 93 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது.
இந்த ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 33 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கூப்பர் கானொலி, நேகல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். பஞ்சாப் அணியின் வலுவான பேட்டிங் வரிசை, மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ரோஹித் இல்லை
ஆர்சிபி அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது மும்பை அணியின் சீனியர் நட்சத்திரமான ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














