”பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்துவதே இலக்கு” – சொல்கிறார் இளம் ‘வேக புயல்’ பிரஃபுல் ஹிங்கே

0
28

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் 217 ரன்கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 19 ஓவர்களில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடக்க ஓவரை வீசிய அறி​முக வேகப்​பந்து வீச்​சாள​ரான பிரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்​களை வீழ்த்தி அசத்​தி​னார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்​றில் தொடக்க ஓவரில் 3 விக்கெட்​களை வீழ்த்​திய முதல் அறிமுக வீரர் என்ற சாதனையை படைத்​திருந்​தார் பிரஃபுல் ஹிங்​கே. இந்த ஆட்​டத்​தில் 4 ஓவர்​களை வீசிய பிரஃபுல் ஹிங்கே 34 ரன்களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை கைப்பற்றினார். இதனால் 9 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை கொத்​தாக தாரை வார்த்த ராஜஸ்​தான் அணி​யால் வெற்றிக்​கான வழியை கண்​டறிய முடி​யாமல் போனது.

மற்​றொரு அறி​முக வேகப்​பந்து வீச்​சாள​ரான ஷகிப் ஹூசைன் 4 ஓவர்​களை வீசி 24 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஆட்ட நாயகன் விருது வென்ற பின்​னர் பிரஃபுல் ஹிங்கே கூறிய​தாவது: நான் அறி​முக​மாகும் போட்​டி​யிலேயே 4 முதல் 5 விக்கெட்டு​களை வீழ்த்​து​வேன் என்று ஏற்​கெனவே எழுதி வைத்​திருந்​தேன். பவர்​பிளே ஓவர்​களில் ஆதிக்​கம் செலுத்த வேண்​டும் என்​பதே எனது இலக்​காக இருந்​தது.

எப்​போதுமே எண்​ணங்​கள் நிஜ​மாகும் என்​பதை நான் முழு​மை​யாக நம்​பு​கிறேன். 13-வது வயதில் நான் கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்கினேன். அப்​போது எனக்கு லெதர் பால் கிரிக்​கெட் என்​றால் என்​னவென்றே தெரி​யாது. ஒரு கிளப்​பில் சேர அனு​ம​திக்​கு​மாறு என் தந்​தை​யிடம் கேட்டேன். ஆனால் நான் மிக​வும் சிறிய பையன் என்று அவர் முதலில் மறுத்​தார்.

பிறகு அவரே என்னை அங்கு அழைத்​துச் சென்றார், அன்று முதல் நான் தொடர்ந்து விளை​யாடி வரு​கிறேன். இந்த விருதை எனது குடும்​பத்​தினருக்கு சமர்ப்​பிக்க விரும்பு​கிறேன். வைபவ் சூர்​ய​வன்​ஷிக்கு பவுன்​ஸர் வீசி அதன் வாயி​லாக அவரது விக்​கெட்டை வீழ்த்​து​வேன் என என்​னுடைய சக அணி வீரர்​களிடம் கூறி​யிருந்​தேன். எப்​படி​யா​வது அவரை அவுட் செய்ய வேண்​டும் என்​பது​தான் எனது ஒரே எண்​ண​மாக இருந்​தது. இவ்​வாறு பிரஃபுல் ஹிங்கே கூறி​னார்.

யார் இந்த பிரஃபுல் ஹிங்​கே?

24 வயதான பிரஃபுல் ஹிங்​கே, மகா​ராஷ்டி​ரா​வின் நாக்​பூரைச் சேர்ந்​தவர். இவர் விதர்பா அணிக்​காக ரஞ்சி கோப்​பை​யில் விளை​யாடி வரு​கிறார். ஆரம்​பத்​தில் பேட்​ஸ்​மேனாக இருந்த பிரஃபுல் ஹிங்​கே, தனது தந்​தை​யின் அறி​வுரைப்​படி வேகப்​பந்து வீச்​சாள​ராக மாறி​னார். எம்​ஆர்​எஃப் வேகப்​பந்து அகாட​மி​யில் மெக்​ராத், செந்​தில்​நாதன், வருண் ஆரோன் ஆகியோரிடம் பயிற்சி பெற்​றுள்​ளார். ஹைத​ரா​பாத் அணிக்​காக ரூ.30 லட்​சத்​துக்கு ஏலம் எடுக்கப்​பட்டு இருந்​தார். தனது அறி​முக ஆட்​டத்​திலேயே அனை​வரை​யும்​ திரும்​பி பார்க்​க வைத்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here