LiK – விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி?

0
103

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். தொடர்ச்சியாக ஹிட் மேல் ஹிட் கொடுத்து ஜென்ஸீக்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், அனிருத் இசையில் ஹிட் பாடல்கள் என நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LiK) எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

படத்தின் கதை 2040-ஆம் ஆண்டு சென்னையில் நடக்கிறது. மனிதர்களின் காதலை தீர்மானிக்கும் ஒரு மொபைல் செயலிதான் படத்தின் மையக்கரு. கமிட்மென்ட், பிரேக் அப், காதலின் அளவு என அனைத்தையும் வரையறுக்கும் அந்த செயலியை உருவாக்கி பெரும் பணக்காரராக இருக்கிறார் சூரியன் (எஸ்.ஜே.சூர்யா).

இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வாடையே இல்லாமல் இயற்கை சூழ்ந்த ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் அன்புக் கடலின் (சீமான்) மகன் ‘வைப்’ வாஸி (பிரதீப் ரங்கநாதன்). சிறுவயது முதல் தாயின் அரவணைப்பு இன்றி செல்போனுக்கு அடிமையாகி வளரும் தீமா (கீர்த்தி ஷெட்டி) மீது கண்டதும் காதல் வருகிறது ஹீரோவுக்கு. மொபைல் போனுக்கு பழக்கப்படாத அவர், நாயகிக்காக புதிய போன் ஒன்றை வாங்கி ‘Lik’ செயலியையும் பதிவிறக்கம் செய்கிறார். அதன் மூலம் இணையும் இருவரும் காதலில் விழுகின்றனர்.

ஒரு கட்டத்தில் காதலின் அளவை சொல்லும் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்கிறார் அந்த செயலியின் நிறுவனர் சூரியன். இந்த அப்டேட் கொடுக்கும் தரவால் நாயகனிடமிருந்து நாயகி விலகிச் செல்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கியதுமே எதிர்காலச் சென்னையை ஒரு நவீன தொழில்நுட்ப நகரமாக கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். வானளாவிய கட்டிடங்கள், ஹாலோகிராஃபிக் விளம்பரப் பலகைகள், பறக்கும் கார்கள் என ஒரு ஹாலிவுட் தரத்திலான மெகா சிட்டியை நாம் காண்கிறோம். இதுவே நம்மை ‘அட’ போடவைத்து உள்ளே இழுத்து விடுகிறது. 

தனது முந்தைய படங்களைப் போலவே இதிலும் காதலே பிரதானம். ஆனால் இந்த முறை அதற்கு ஒரு ‘ஃப்யூச்சரிஸ்டிக்’ பாணியிலான கதையை எழுதி, ஒரு புதிய களத்துடன் வந்திருக்கிறார். படம் முழுக்க வைக்கப்பட்டுள்ள எதிர்கால குறியீடுகள் ஈர்க்கின்றன. உதாரணமாக ‘தலைவர் 189’, ‘மிஷன் இம்பாசிபிள் 14’, விஜய் மகன் இயக்க அஜித் மகன் நடிக்கும் ‘பத்ரி 2’ போன்ற அம்சங்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

ஒரு காட்சியில் வரும் சென்னை வீதிகளில் ஸ்மார்ட் குடை விற்கும் அமெரிக்க இளைஞரும், அவரது குரலும் குபீர் மேக்ஸ் ரகம். அதேபோல பரங்கிமலையில் வைக்கப்பட்டிருக்கும் ஹாலிவுட் ஸ்டைல் கோலிவுட் சின்னம் என போகிற போக்கில் பல பகடியான, அதே சமயம் நுணுக்கமான விஷயங்கள் படம் முழுக்க தூவப்பட்டுள்ளன.

அன்புக் கடலாக வரும் சீமானும், அவருடைய பின்னணியும் எழுதப்பட்ட விதம் சிறப்பு. தொழில்நுட்பத்தின் மீதான அவருடைய வெறுப்புக்கு அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி நியாயம் செய்கிறது. ஆனால் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு ஏற்ற ஓர் ஆழமான திரைக்கதை இதில் மிஸ்ஸிங் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. 

கலர்ஃபுல்லான செட்-அப், கண்ணை உறுத்தாத கிராபிக்ஸ், துள்ளலான இசை என பல பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் நம்மை தொடர்ந்து யோசிக்க விடாமல் ஆக்கிரமிக்கக் கூடிய சுவாரஸ்யமான காட்சியமைப்புகள் படத்தில் தென்படவில்லை. மிக மிக மேம்போக்காகவே முழுப் படமும் எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாதி கூட மேலே குறிப்பிட்ட அம்சங்களால் பாதகமின்றி நகர்ந்து விடுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் மெயின் கதைக்குள் நுழைந்ததுமே படம் படுத்து விடுகிறது.

காதலை பிரதானமாக கொண்ட ஒரு படத்தின் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் இம்மியளவும் அழுத்தமாக எழுதப்படாதது வருத்தமே. பிரதீப் – கீர்த்தி, சீமான் – பிரதீப், கீர்த்தி – அவருடைய அம்மாவாக வரும் மாளவிகா என உறவுகளுக்கு இடையிலான காட்சிகள் உணர்வுபூர்வமாக வைத்திருக்கப்பட அத்தனை சாத்தியங்கள் இருந்தும் மிக இலகுவாக கையாளப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சிறுவயது முதல் தாய்ப் பாசத்தை அறியாத ஒரு பெண்ணுக்கு, ஒரு கட்டத்தில் தன் தாயிடமிருந்து அந்த அரவணைப்பு கிடைக்கும்படியான ஒரு காட்சி எவ்வளவு எமோஷனலாக எழுதப்பட்டிருக்க வேண்டும்? 

நடிகராக பிரதீப் ரங்கநாதன். முந்தைய படங்களைப் போலவே சேட்டையான மேனரிசங்களுடன் ஈர்க்கிறார். அவருக்கே உரித்தான உணர்வுபூர்வ காட்சிகளுக்கான தீனி இதில் இல்லையென்றாலும் முடிந்தவரை படத்தை தாங்கிப் பிடித்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி ஷெட்டிக்கு அழகுப் பதுமையாக வந்து செல்வதைத் தவிர பெரிய வேலை இல்லை. பல காட்சிகளில் நடிப்பும் படுசெயற்கையாகவே தோன்றுகிறது. யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். சீமான் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.

வழக்கம்போல அனிருத்தின் இசையே பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்துகிறது. தீமா, எனக்கென யாரும் இல்லையே உள்ளிட்ட பாடல்கள் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. படத்தின் வரும் ரோபோவுக்கு அனிருத் குரல் கொடுக்கவும் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் கலர் ஃபுல் ஆன ஃப்ரேம்கள்  படம் முழுக்க வேறு உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. கலை இயக்குநரின் உழைப்பு படம் நெடுக தெரிகிறது. 

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எப்படி ஆக்கிரமிக்கிறது என்ற வலுவான கருத்து ஓகே. ஆனால் அதை காட்சிப்படுத்திய விதத்தில் போதுமான உழைப்பு செலுத்தப்படவில்லை. உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ப்ளாக் மிரர்’ வெப் தொடரை சொல்லலாம். கிட்டத்தட்ட இதே களம்தான். ஆனால் அதில் இருக்கும் தீவிரத்தன்மையும், தாக்கமும் இதில் இல்லை. ஜாலியான களமாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட விஷயம் ஆடியன்ஸுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

மொத்தத்தில் தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோக்களால் ஒருபோதும் மனித இதயத்தின் உண்மையான தேடலையும், அன்பையும் ஈடு செய்ய முடியாது என்பதை படம் வலியுறுத்துகிறது. வார இறுதியில் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க விரும்புவர்கள் தாரளமாக டிக்கெட் எடுக்கலாம். 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here