சென்னை குடிநீர் வாரியம் சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் ரூ.27.50 கோடியில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று கீழ்நிலைநீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக சுமார் 1,141 மீட்டர் நீளத்துக்கு 400 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2-ம் கட்டமாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சுமார் 963 மீட்டர் நீளத்துக்கு 300 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மண்ணடி, கிளைவ் பேட்டரி, ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள 70 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ.பர்வீஸ், தலைமைப் பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், பகுதி பொறியாளர் எம்.எஸ்.ஆனந்த் குமார், மண்டலக்குழுத் தலைவர் பி.ராமுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.













