இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்குநீக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கஉருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை 21 கோயில்களின் பயன்பாடற்ற தங்க நகைகளை உருக்கி கிடைக்கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் தங்கக் கட்டிகள் எஸ்பிஐ-யின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த கோயிலின் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.17 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் வட்டி கிடைக்கப் பெறுகிறது.
இந்த தொகை அந்தந்த கோயிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைக்கப்பெற்று பயன்பாடற்ற 34 கிலோ 375 கிராம் எடையுள்ள தங்க நகைகளை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்ற எஸ்பிஐ-யிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் இரா.வான்மதி, பெ.க.கவெனிதா, எஸ்பிஐ சென்னை மத்திய மண்டல மேலாளர் இன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













