“தமிழ் சினிமா இந்தியாவுக்கே டிரெண்ட்செட்டர்” – உதயநிதி புகழாரம்

0
20

“தமிழ் திரையுலகம் உள்ளடக்கத்திலும் சரி, தொழில்நுட்பரீதியாகவும் சரி, எல்லா வகையிலும் இந்தியாவுக்கே ஒரு டிரெண்ட்செட்டர் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.13) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இதில் அவர் பேசியதாவது: “இந்தியாவிலேயே மிகவும் துடிப்பான துறை என்றால் நம்முடைய தமிழ் சினிமாத் துறைதான். வருடா வருடம் ஒவ்வொரு ஜானரிலும் முக்கியமான படங்களை நம்முடைய தமிழ் திரையுலகம் வழங்கிக் கொண்டிருக்கிறது.

கலைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும், கடந்த மூன்றரை, நான்கு வருடங்களாக நான் கலந்து கொள்வதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், நிச்சயம் நானும் உங்களில் இருந்து உருவாகி வந்தவன்தான். இன்னும் சொல்லப்போனால் ரொம்ப நாளுக்குப் பிறகு பள்ளி வகுப்பறைக்கு வந்தது போன்று ஒரு உணர்வு உள்ளது. அந்த உரிமையோடும், பெருமையோடும் உங்களையெல்லாம் சந்திக்க நான் வருகை தந்திருக்கின்றேன்.

இந்த விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டவுடனே நிறைய விமர்சனங்கள் வந்தது. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், பல ஆண்டு காலமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல், வழங்கப்படாமல் இருந்தது. நம்முடைய முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் உடனடியாக இந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். 

கலைத்துறையில் இருக்கக்கூடிய உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். விருது என்று அறிவித்து கொடுத்தால், ஒரே நேரத்தில் எல்லாருக்கும் கொடுக்க முடியாது. எனவே விருது பெற்றவர்கள் தமிழ் கலைத்துறைக்கு எவ்வளவு பெருமைகளைத் தேடி தந்து கொண்டிருக்கிறீர்களோ, அதே அளவிற்கு மற்றவர்களும் நிச்சயமாக நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமைகளைத் தேடிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரமும் நிச்சயமாக உரிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் இரண்டு பேரும் கலைத்துறையில் எவ்வளவோ சாதித்துள்ளார்கள். கலைத்துறையில் ஈடுபட்டவர்கள் மட்டும் கிடையாது. கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தவர்கள்தான் இவர்கள் இரண்டு பேரும். இவர்கள் இரண்டு பேர் தமிழ் சினிமாவுடைய போக்கையே மாற்றியவர்கள். அதே மாதிரி, நம்முடைய முதலமைச்சரும் திரைத்துறையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பணியாற்றி இருக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ் திரையுலகம் உள்ளடக்கத்திலும் சரி, தொழில்நுட்பரீதியாகவும் சரி, எல்லா வகையிலும் இந்தியாவிற்கே ஒரு டிரெண்ட் செட்டர் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு, இந்த விருதுகளை வழங்குவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் உண்டு, நல்ல படைப்புகளையும், கலைஞர்களையும் கொண்டாட வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். உத்வேகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

திரைத்துறையினுடைய வளர்ச்சிக்கும், திரைக்கலைஞர்களின் முன்னேற்றத்துக்கும் நம்முடைய அரசு என்றைக்கும் துணை நிற்கும். குறிப்பாக, கடந்த 5 வருடத்தில் மட்டும், நம்முடைய அரசு 805 உறுப்பினர்களுக்கு சுமார் 47 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை, விபத்துக்காப்பீடு, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என்று ஏராளமான நலத்திட்டங்களை கொடுத்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவும், உலக திரைப்படங்களை, தமிழ் ஆடியன்ஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கவும், நம்முடைய அரசு உங்களுக்கு துணையாக இருக்கின்றது. கடந்த 4 வருடத்தில் மட்டும், சர்வதேச திரைப்பட விழா நடத்த சுமார் 4 கோடியே 15 லட்சம் ரூபாயை முதலமைச்சர், மானியமாக தந்திருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, தமிழ்த்திரையுலகின் மூத்த கலைஞர்களை கவுரவிக்கின்ற வகையில், கலைஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும் வருடா, வருடம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி கலை உலகினருக்கு கழக அரசு என்றைக்குமே உற்ற துணையாக இருந்து வருகின்றது” இவ்வாறு உதயநிதி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here