தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாள முத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்திருந்தார். அவர் கடந்த 20 ஆண்டு களாக மனைவி, மகன், மகளுடன் சேலத்தில் வசித்து வந்தார். மேலும், வெள்ளிப் பட்டறை மற்றும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
தவெக நிகழ்ச்சியில் பங்கேற்க அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அடையாள அட்டை ஏதுமின்றி சிராஜ் உள்ளே நுழைந்துள்ளார்.
விஜய் பேசி முடித்து கிளம்பத் தயாராக இருந்த நேரத்தில், நீண்டநேரம் வெயிலில் காத்திருந்த சிராஜ் திடீரென மயங்கி விழுந்தார். மைதானத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிராஜ் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தவெக மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன், சிராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அன்னதானப்பட்டி போலீஸார் சிராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், ஓராண்டுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பட்ட சிராஜ், இதய அறுவை சிகிச்சை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகி நிர்மல்குமார் கூறும்போது, “வடமாநில இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும் உடனே முதலுதவி செய்து, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். எனினும் அவர் உயிரிழந்தார். இது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.











