பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி மற்றும் அவரது குழுவினர் முதல்கட்ட ஆய்வை நேற்று தொடங்கினர். கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
சென்னையில் 2-ம் கட்டமாக, 3 வழித்தடங்களில், 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தின் ஒருபகுதியாக, பூந்தமல்லி – வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவு உயர்மட்ட தடத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு சோதனைகள், பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையருக்கு ஆய்வு மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி மற்றும் அவருடைய குழுவினர் முதல் கட்ட ஆய்வை நேற்று தொடங்கினர்.
முதல்நாள் ஆய்வின் தொடக்கமாக, 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் ஐயப்பன்தாங்கல் மெட்ரோ நிலையம் வரையிலான 6.134 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.
மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையருடன் 3 பாதுகாப்பு துணை ஆணையர்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் தி.அர்ச்
சுனன் (திட்டங்கள்), மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முதல்கட்ட ஆய்வின் போது, கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளக்கூறுகள் மற்றும் முக்கிய மேம்பாலக் கட்டமைப்புகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.



