ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். பிப். 13 -ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளார்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சசிகுமார் பேசும்போது, ” இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது.
‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர்.
இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி” என்றார். படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, விஜய் மில்டன், மாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



