ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பதிவறை எழுத்தர் பணிக்கு இணையான ரூ.15,900-50,400 காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்கள் பெற்று வருகின்றனர்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி போன்றவையும் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், அரசுப் பணியாளர்களுக்கு இணையான பணிசார்ந்த உரிமைகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தமிழக அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு கீழ்நிலையில் அலுவலகப் பணியை மட்டுமே மேற்கொள்ளும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு இணையான பதவியில் உள்ள பதிவுறு எழுத்தர்கள், புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், அலுவலகப் பணி மற்றும் களப் பணி ஆகிய இரண்டையும் மேற்கொள்ளும் ஊராட்சி செயலர்கள் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாததைக் கண்டித்தும், அவர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கவும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













