தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணையர், சென்னை இணை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கூடுதல் டிஜிபியாக பணி ஓய்வு பெற்று சென்னையை அடுத்த பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று எரியூட்டப்படுகிறது.
முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். நான் சென்னை மேயராக இருந்த காலத்தில் சென்னை காவல் இணை ஆணையராக பணியாற்றினார்.
பல்வேறு பொறுப்புகளில் சட்டம்-ஒழுங்கை திறம்பட கையாண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், காவல் துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



