ஆங்கில மருத்துவத்தை அடுத்து, யுனானி மருத்துவக் கல்வி இந்தியில் போதிக்கப்பட உள்ளது. நாட்டில் முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இது அமலாக உள்ளது.
பாஜக ஆளும் ம.பி.யில் ஆங்கில மருத்துவக் கல்வி இந்தியில் துவக்கப்பட்டது. அந்தவகையில் யுனானி மருத்துவ கல்வி இந்தியில் தொடங்கப்பட உள்ளது. யுனானி மருத்துவத்தை இந்தியில் போதிக்க அதன் பாடங்களை ம.பி. அரசு தயார் செய்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆயுஷ் துறை உருது புத்தகங்களை இந்தியில் மொழி பெயர்த்துள்ளது. பியுஎம்எஸ் எனும் இளங்கலை மருத்துவக் கல்வியின் முதல் ஆண்டில் ஏழு பாடங்கள் உள்ளன. இவற்றில் ஐந்து பாடங்களுக்கான உருது புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டு பாடங்களுக்கான புத்தகங்கள் உருது மற்றும் அரபு மொழிகளில் உள்ளன. உடற்கூறியல் மற்றும் உடலியல் புத்தகங்களின் மொழிபெயர்ப்புப் பணியை மருத்துவக் கல்வித் துறை மேற்கொண்டது.
யுனானி மருத்துவத்திற்கான பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருப்பதால், அதே புத்தகங்கள் இங்கும் பயன்படுத்தப்படும். இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையமும் இதற்கு ஆதரவாக உள்ளது. அந்த ஆணையம் இந்தியில் ஒரு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. இதற்கிடையில், ம.பி.யின் மருத்துவப் பல்கலைக்கழகம் உருது மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் வினாத்தாள்களைத் தயாரித்து வருகிறது.
சமீப ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மருத்துவமானது இந்தியில் போதிக்கப்படத் துவங்கியது. அதன் பாடங்களும் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து சமீப ஆண்டுகளாக உருது மொழி பாடங்கள் கொண்ட யுனானி மருத்துவத்தின் விரிவுரைகள் இந்தியில் போதிக்கப்பட துவங்கின. இப்போது அதன் உருது மற்றும் அரபி மொழிப் பாடங்களும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
எனவே, யுனானி மருத்துவக் கல்வியும் இனி இந்தியில் போதிக்கப்பட உள்ளது. இந்த இந்தி முறை பாடங்கள், வரும் ஜுலை மாதம் செமஸ்டர் தேர்வு துவங்கும் போது அமலாக்கப்பட உள்ளன. முஸ்லிம்கள் யுனானி மருத்துவக் கல்வியில் அதிக பட்டங்களை பெற்று வருவது நினைவுகூரத்தக்கது.



