2024-ல் டெல்லியில் சுவாச நோய்களால் 9,000+ பேர் உயிரிழப்பு

0
18

டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புள்ளிவிவரங்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 8,801-ஐ விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது. மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது.

தினமும் சராசரியாக 381 இறப்புகள் பதிவாகும் நிலையில், சுவாச நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் ஏறுமுகத்தில் இருப்பது டெல்லியின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here