விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் எஞ்சிய 2 ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய 26 வயதான இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 5 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கினார். அப்போது திடீரென அசவுகரியமாக உணர்ந்ததால் களத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறினார்.
இதன் பின்னர் அவர், மீண்டும் களத்துக்குள் திரும்பவில்லை. எனினும் பேட்டிங்கில் 8-வது வீரராக களமிறங்கினார். இந்நிலையில் இடது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர், நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் எஞ்சிய 2 ஆட்டங்களில் இருந்தும் விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே காயம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் விலகி இருந்தார். முன்னதாக கடந்த வாரம் திலக் வர்மாவும் காயம் காரணமாக விலக நேரிட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய அணியில் அறிமுக வீரராக ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நாளை (14-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆயுஷ் பதோனி, இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான ஆயுஷ் பதோனி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். அதேவேளையில் ஆஃப் ஸ்பின்னிலும் திறம்பட செயல்படக்கூடியவர். விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் ரிஷப் பந்த் இல்லாத நிலையில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் ஆலோசகராக பணியாற்றிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆயுஷ் பதோனி விளையாடி இருந்தார். அப்போது தனது அதிரடியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். முதல்தர கிரிக்கெட்டில் பதோனியின் சராசரி 57.96 ஆக உள்ளது.



