பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நேற்று நேரில் வந்தார். அங்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-கை சந்தித்து வலியுறுத்தி மனு அளித்தார்.
அப்போது, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையின் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜன.28 தேதி வரை நீட்டிப்பு செய்யவும், ஜன.24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பெ.சண்முகம் கூறுகையில், ‘‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை முழுமையான ஆய்வுபடுத்தியுள்ளோம்.அந்த ஆய்வு அறிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவரிடம் கொடுத்துள்ளோம். இதில் இறந்து போனவர்களுடைய எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இதுபோல பெண்களைப் பொருத்தவரை 41 வயதில் இருந்து 61 வயது பெண்கள் இடம் மாறுவதும், முகவரி மாறுவதும் அதிகமாக உள்ளது. ஆகவே, இது எல்லாமே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.



