நியூஸி.க்கு எதிராக 301 ரன்கள் இலக்கை போராடி வென்ற இந்தியா – முதல் ஒருநாள் ஹைலைட்ஸ்

0
18

நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முதல் ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டி​யில் 301 ரன்​கள் இலக்கை இந்​திய அணி போராடி வெற்றி பெற்​றது.

குஜ​ராத் மாநிலம் வதோத​ரா​வில் உள்ள கோடாம்பி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணியின் கேப்​டன் ஷுப்​மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய நியூஸிலாந்து அணிக்கு டெவன் கான்​வே, ஹென்றி நிக்​கோல்ஸ் ஜோடி நிலைத்து நின்று விளை​யாடி சிறப்பான தொடக்​கம் கொடுத்​தது. ஹென்றி நிக்​கோல்ஸ் 60 பந்துகளில், 6 பவுண்​டரி​களு​டன் தனது 16-வது அரை சதத்தை கடந்தார். மறு​புறம் டெவன் கான்வே 60 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் தனது 6-வது அரை சதத்தை அடித்​தார். முதல் விக்​கெட்​டுக்கு 21.4 ஓவர்​களில் 117 ரன்​கள் குவித்த இந்த ஜோடியை ஹர்​ஷித் ராணா பிரித்​தார்.

சிறப்​பாக விளை​யாடி வந்த ஹென்றி நிக்​கோல்ஸ் 69 பந்துகளில், 62 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஹர்​ஷித் ராணா வீசிய வைடு யார்க்கர் பந்தை அடித்த போது மட்டை விளிம்​பில் பட்டு விக்​கெட் கீப்​பர் கே.எல்​.​ராகுலிடம் கேட்ச் ஆனது. ஹர்​ஷித் ராணா தனது அடுத்த ஓவரில் டெவன் கான்​வேவை போல்​டாக்​கி​னார். டெவன் கான்வே 67 பந்துகளில் 56 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து களமிறங்கிய வில் யங் 12 ரன்​களில் மொகமது சிராஜ் பந்திலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்​களில் குல்​தீப் யாதவ் பந்தி​லும் நடையை கட்​டினர்.

நடு​வரிசை​யில் அடுத்​தடுத்து விக்​கெட்​கள் சரிந்த போதி​லும் டேரில் மிட்​செல் அதிரடி​யாக விளை​யாடி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய மிட்​செல் ஹே 18, கேப்​டன் மைக்​கேல் பிரேஸ்​வெல் 16, ஜாக் ஃபோக்ஸ் 1 ரன்னில் வெளி​யேறினர். தனது 12-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்​செல் 71 பந்​துகளில், 3 சிக்ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் கிறிஸ்​டியன் கிளார்க் 17 பந்துகளில், 3 பவுண்​டரி​களுடன 24 ரன்​களும், கைல் ஜேமிசன் 8 ரன்​களும் சேர்க்க 50 ஓவர்​கள் முடி​வில் நியூஸிலாந்து அணி 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 300 ரன்​கள் குவித்​தது. இந்​திய அணி தரப்​பில் மொகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்​களை வீழ்த்​தினர். குல்​தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றி​னார்.

இதையடுத்து 301 ரன்​கள் இலக்​குடன் இந்​திய அணி பேட் செய்​தது. தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் மிட் ஆஃப் திசை​யில் நின்ற மைக்​கேல் பிரேஸ்​வெலிடம் பிடி​கொடுத்து ஆட்டமிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு ரோஹித் சர்மா, ஷுப்​மன் கில் ஜோடி 8.4 ஓவர்​களில் 39 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய விராட் கோலி விரை​வாக ரன்கள் சேர்த்தார். இதனால் இந்​திய அணி 16.1 ஓவர்​களில் 100 ரன்​களை எட்​டியது. தனது 16-வது அரை சதத்தை கடந்த கேப்​டன் ஷுப்​மன் கில் 71 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆதித்யா அசோக் பந்​தில் கவர் திசை​யில் நின்ற கிளென் பிலிப்ஸிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 2-வது விக்கெட்​டுக்கு ஷுப்​மன் கில், விராட் கோலி ஜோடி 118 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலியுடன் இணைந்து விரை​வாக ரன்​கள் சேர்த்து நியூஸிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுத்​தார். அபாரமாக விளை​யாடிய விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

91 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​கள் விளாசிய விராட் கோலி, கைல் ஜேமிசன் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து மிட் ஆஃப் திசை​யில் விளாசிய போது மைக்​கேல் பிரேஸ்​வெலிடம் கேட்ச் ஆனது. 3-வது விக்​கெட்​டுக்கு விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 77 ரன்​கள் சேர்த்​தது.

இதைத் தொடர்ந்து களமிறங்​கிய ரவீந்​திர ஜடேஜா 4 ரன்களில் கைல் ஜேமிசன் பந்​தில் நடையை கட்​டி​னார். கடைசி 10 ஓவர்​களில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 62 ரன்கள் தேவை​யாக இருந்த நிலை​யில் கே.எல்​.​ராகுல் களமிறங்​கி​னார்.சீராக ரன்​கள் சேர்த்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 47 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 49 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் வீசிய ஆஃப் கட்டரில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். 8 ரன்​கள் இடைவெளி​யில் கைல் ஜேமிசன் வீழ்த்​திய இந்த 3 விக்கெட்​களால் இந்​திய அணியின் பக்​கம் நெருக்​கடி திரும்​பியது.

6-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய ஹர்​ஷித் ராணா மட்டையை சுழற்​றி​னார். கிறிஸ்​டியன் கிளார்க் வீசிய 45-வது ஓவரின் கடைசி பந்தை ஹர்​ஷித் ராணா சிக்​ஸருக்கு விளாசி​னார். கடைசி 5 ஓவர்களில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 34 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. மைக்​கேல் பிரேஸ்​வெல் வீசிய அடுத்த ஓவரில் 8 ரன்​கள் சேர்க்கப்பட்டன. கிறிஸ்​டியன் கிளார்க் வீசிய 47-வது ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஹர்​ஷித் ராணா அடுத்த பந்தில் விக்​கெட் கீப்​பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

23 பந்​துகளை சந்​தித்த ஹர்​ஷித் ராணா ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளு​டன் 29 ரன்​கள் சேர்த்​தார். அவர், ஆட்டமிழந்த போது அணி​யின் வெற்​றிக்கு 23 பந்​துகளில், 22 ரன்​கள் தேவை​யாக இருந்தன. இதையடுத்து வாஷிங்டன் சுந்​தர் களமிறங்​கி​னார். இந்த ஓவரில் எஞ்​சிய 4 பந்​துகளி​லும் தலா ஒரு ரன் சேர்க்​கப்​பட்​டது. ஜாக் ஃபோல்க்ஸ் வீசிய 48-வது ஓவரில் 6 ரன்​கள் எடுக்கப்பட்டன. கடைசி 2 ஓவர்​களில் 12 ரன்​கள் தேவையாக இருந்​தன.

கிறிஸ்​டியன் கிளார்க் வீசிய 49-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் 4-வது பந்தை கே.எல்​.​ராகுல் ஸ்கூப் ஷாட் மூலம் பைன் லெக்திசை​யில் பவுண்​டரி விளாசி​னார். தொடர்ந்து தாழ்வாக வீசப்​பட்ட புல்​டாஸை பந்தை கவர் திசை​யில் பவுண்​டரி​யாக மாற்றி அசத்​தி​னார் கே.எல்​.​ராகுல். கடைசி பந்தை கே.எல்​.​ராகுல் சிக்​ஸருக்கு பறக்​க​விட இந்​திய அணி 49 ஓவர்​களில் 6 விக்கெட்​கள் இழப்​புக்கு 306 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது.

கே.எல்​.​ராகுல் 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 7 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். 4 விக்கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது போட்டி வரும் 14-ம் தேதி ராஜ்கோட்​டில் நடை​பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here