சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்தமான் வருகிறார்.
நாட்டின் சுதந்திரத்துக்காக தனி ராணுவத்தை உருவாக்கி போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 129-வது பிறந்த நாள் ஜன.23-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தமான் நிகோபார் தீவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்தில் (போர்ட் பிளேர்) மூவர்ண கொடியேற்றி நேதாஜி கொண்டாடினார். அதை நினைவுகூரும் வகையில் 23-ம் தேதி நேதாஜி மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மேலும், இங்குள்ள நேதாஜியின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அத்துடன், வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அந்தமானின் கொடிய சிறையைப் பார்வையிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் நிகோபர் தீவின் கேம்பெல் பகுதியில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பிரதமர் மோடியின் அந்தமான் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நேதாஜியின் தன்னலமற்ற சேவைக்காக அவரது பிறந்த நாளை ”பரக்கிரம் திவஸ்” என்ற பெயரில் ஆண்டு தோறும் மத்திய அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு நேதாஜி மைதானத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளூர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

