சோமநாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அது முறியடிக்கப் பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. 1,026-ல் கஜினி முகமது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு 1,000 ஆண்டுகளைக் கடந்து சோமநாதர் கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 8-ம் தேதி சோமநாதர் சுயமரியாதை பெருவிழா தொடங்கியது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் சோமநாதர் கோயிலுக்கு சென்றார். நேற்று காலையில் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சோமநாதரின் வரலாறு என்பது அழிவு மற்றும் தோல்வியைப் பற்றியது அல்ல, மாறாக வெற்றி மற்றும் மறுமலர்ச்சியைப் பற்றியது.
அடிப்படைவாத படையெடுப்பாளர்கள் இப்போது வரலாற்றின் பக்கங்களாகச் சுருங்கிவிட்டனர். ஆனால் சோமநாதர் கோயில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதுதான் கால சுழற்சி. சோமநாதர் கோயிலை அழிக்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தடுத்ததுடன், அதன் பண்டைய காலப் பெருமையை மீட்டெடுப்பதற்கான உறுதிப்பாடு மற்றும் முயற்சிகளால், இன்று மன உறுதி, நம்பிக்கை மற்றும் தேசியப் பெருமையின் சக்திவாய்ந்த அடையாளமாகத் திகழ்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் தீவிரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் கோயிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என்று மட்டுமே நமக்குக் கற்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, சர்தார் வல்லபபாய் படேல் சோமநாதர் கோயிலை மீண்டும் கட்ட உறுதிமொழி எடுத்தார்.
அப்போது, அதற்கு சிலர் தடையை ஏற்படுத்தினர். எனினும், 1951ல் மறுநிர்மானம் செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டவர்கள், இத்தகைய தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களிடம் மண்டியிட்டனர். சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டுவதைத் தடுக்க முயன்ற அந்தச் சக்திகள் இன்றும் நம்மிடையே உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.
இந்தத் திருத்தலத்தைப் போலவே, வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் பல முறை இந்தியாவை அழிக்க முயன்றனர். இந்தத் திருத்தலத்தை அழிப்பதன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக படையெடுப்பாளர்கள் கருதினர். ஆனால் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், சோமநாதர் கொடி இன்றும் பறந்து கொண்டிருக்கிறது. இந்த 1,000 ஆண்டு காலப் போராட்டத்துக்கு உலக வரலாற்றில் இணையே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கலைஞர்கள் செண்டை மேளம் அடித்து பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது அவர் ஒரு கலைஞரின் மேளத்தில் உற்சாகமாக அடித்தார்.
ட்ரோன் காட்சி: பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 3,000 ட்ரோன்களின் காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிவபெருமானின் உருவம், சிவலிங்கம் மற்றும் சோமநாதர் கோயிலின் முப்பரிமாண வடிவம் உள்ளிட்ட பல வடிவங்கள் விண்ணில் ஒளிர்ந்தன.
சர்தார் படேல் மற்றும் வீர் ஹமிர்ஜி கோகில் ஆகியோரின் உருவங்களும் சித்தரிக்கப்பட்டன. அத்துடன் பிரதமர் மோடியின் உருவமும் வானில் சித்தரிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர வீரரான வீர் ஹமிர்ஜி கோகில், சோமநாதர் கோயிலைப் பாதுகாக்கத் தனது உயிரைத் தியாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

