சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது.
இதையடுத்து, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். 14-வது நாளாக சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் நேற்று காலை சுமார் 500 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மதியம் 12 மணியளவில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணியாக வந்து சேர்ந்தனர். தொடர்ந்து திடீரென மேம்பாலத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கைது நடவடிக்கைகள் மட்டும் 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.
மேலும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மண்டபங்களில் அடைக்கப்பட்டு, இரவில் விடுவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் பணிகளும் பாதிக்கப்பட்டு வருவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதேபோல், பணி நிரந்தம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். ஆசிரியர்களின் கைது செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.



