கடந்த ஆண்டு நவம்பரில் குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு, டெல்லி அரசு நடத்திய நிகழ்ச்சி குறித்த சிறப்பு விவாதம் டெல்லி சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், குரு தேஜ் பகதூருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சில கருத்துக்களைக் கூறியதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், இந்த விவகாரத்தை எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், ஆதிஷி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆதிஷி, மாசு குறித்த விவாதத்தில் இருந்து பாஜக ஓடுவது குறித்தும், தெரு நாய்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அவர்கள் நடத்திய போராட்டம் குறித்தும் தான் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் அமளி நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்புவதாக சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா அறிவித்தார். மேலும் தடயவியல் ஆய்வு அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.



