கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த போதிலும் அவர் எனது கட்சியை உடைத்தார். அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்துவிட்டனர்.
ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல் நாகரிகத்தை மீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒரு போதும் பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.



