திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் திரையில் நிஜத்தைக் காண விரும்பினான். சமதளமாக இருக்கும் வெள்ளைத் திரையில் ஆழத்தை (டெப்த்) ஏற்படுத்தி, 2டி திரையில் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கி பார்வையாளரை அந்த உலகுக்குள் இழுப்பதே ஒளிப்பதிவாளர்களின் கனவாக இருந்தது.
அந்த விருப்பத்தின் தொழில்நுட்ப வடிவமே 3டி சினிமாடோகிராஃபி. இது புதிய கண்டுபிடிப்பல்ல. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மெருகேறிய புதிய புரிதலோடு மீண்டும் மீண்டும் பிறக்கும் சினிமா மொழி.
இண்டரோகுலர் டிஸ்டன்ஸ் -3டி-யின் அடிப்படை: 3டி சினிமாவின் இதயம் என்று சொல்லப்படுவது ‘இண்டரோகுலர் டிஸ்டன்ஸ்’ எனப்படும் நம் கண்களுக்கு இடையேயான தூரம். மனிதக் கண்களுக்கு இடையேயான சராசரி இடைவெளி, சுமார் 63–65 மில்லிமீட்டர். நமது மூளை, இந்த இரண்டு கண்களிலிருந்தும் வரும் சற்றே வேறுபட்ட காட்சிகளை ஒன்றிணைத்தே ‘ஆழம்’(டெப்த்) என்ற உணர்வை உருவாக்குகிறது. இதை ஸ்டெரியொப்ஸிஸ் என்கிறோம்.
3டி கேமரா அமைப்பும் இதையே பின்பற்றுகிறது: இடது கண் – இடது கேமரா, வலது கண் – வலது கேமரா. இந்த 2 கேமராக்களுக்கு இடையேயான தூரமே இண்டரோகுலர் டிஸ்டன்ஸ். இத்தூரத்தை அதிகரித்தால் காட்சி மிகப் பெரியதாகவும், குறைத்தால் மென்மையான ஆழத்துடனும் தோன்றும். தவறாகக் கையாளும்போது பார்வையாளருக்கு கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால்தான் 3டி என்பது துல்லியமான கணக்கீடு.
3டி-யின் ஆரம்பம் மற்றும் மைல்கல்: 3டி-யின் அடிப்படை கருத்து 19-ம் நூற்றாண்டில் ‘ஸ்டெரியொஸ்கோபி’ என்ற அறிவியல் தத்துவம் மூலம் கண்டறியப்பட்டது. 1950-களில் தொலைக்காட்சி பெட்டிகள் பரவலாக வந்தபோது, திரையரங்குகள் பார்வையாளர்களை இழக்கத் தொடங்கின.
மக்களை மீண்டும் திரையரங்கத்துக்கு வரவழைக்க ஹாலிவுட் சினிமா எடுத்த ஆயுதம்தான் 3டி தொழில்நுட்பம். உலக சினிமாவின் முதல் வணிக ரீதியான 3டி மைல்கல், ‘ஹவுஸ் ஆஃப் வேக்ஸ்’ (1953) திரைப்படம். அன்ட்ரி டு டாத் இயக்கிய இப் படத்தின் மிகப் பெரிய விந்தை – அவர் கண் பார்வையற்றவர்.
ஆழத்தை நேரடியாக உணர முடியாத ஒருவர், ஆழத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்கியது சினிமா வரலாற்றின் அழகிய முரண். 2 கேமராக்கள் அருகருகே வைக்கப்பட்டுப் படமாக்கப்பட்ட இப் படம் நேச்சுரல் டெப்த் உணர்வை வழங்கியது. ஆனால் அப்போது பயன்படுத்தப்பட்ட அனாக்லிஃப் (சிவப்பு-நீலம்) கண்ணாடிகள் மற்றும் புரொஜெக் ஷன் ஒருமுகப் படுத்துதலில் இருந்த சிக்கல்களால் அந்த 3டி அலை விரைவில் ஓய்ந்தது.
இந்திய 3டி சினிமா –மை டியர் குட்டிச்சாத்தான்: ஹாலிவுட்டில் 3டி மங்கிய காலத்தில், இந்தியாவில் ஒரு துணிச்சலான முயற்சி நடந்தது. அதுதான் இந்தியாவின் முதல் முழுநீள 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ (1984). டிஜிட்டல் வசதிகள் இல்லாத காலத்தில், 3D ரிக், லென்ஸ் மேட்சிங், ஃபிலிம் அலைன்மென்ட், புரொஜெக் ஷன் என எல்லாவற்றையும் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் தன் கைகளால் (மேனுவல் டிஸிப்ளின்) செய்தார். 3டி என்பது குழந்தைகளின் கற்பனைக்கு ஆழம் கொடுக்கும் கருவி என நிரூபித்தது இத்திரைப்படம்.
அவதார் – 3டி யின் மறுமலர்ச்சி: 2009-ல் வெளிவந்த ‘அவதார்’, 3டி-யை மீண்டும் சினிமாவின் மைய மொழியாக மாற்றியது. இத் திரைப்படத்துக்காக ஜேம்ஸ் கேமரூன் ஃபியூஷன் கேமரா சிஸ்டம் ஒன்றை உருவாக்கினார். இதனால் படமாக்கும் போதே 3டி காட்சிகளின் ஆழத்தை உணர முடிந்தது.







