நான்காவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டபிள்யூபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி, டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சொந்த வேலை காரணமாக இப்போட்டியிலிருந்து விலகுவதாக இருவரும் அறிவித்துள்ளனர். இதையடுத்து எலிஸ் பெர்ரிக்குப் பதிலாக இந்திய வீராங்கனை சயாலி சத்காரே ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். மேலும், சதர்லேண்ட்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங் டெல்லி அணியில் இணையவுள்ளார். இத்தகவலை டபிள்யூபிஎல் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.







