சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், மறுநாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதிமுதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் 4-வது நாளாக சென்னை எழிலகத்தையும், நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தையும் முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். அதேபோல் உழைப்பாளர் சிலை அருகே கூடிய ஏராளமான ஆசிரியர்கள், எழிலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் உட்பட குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
அனுமதி இல்லாமல் சென்றதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காமராஜர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சில ஆசிரியர்களுக்கு லேசான காயமும், மயக்கமும் ஏற்பட்டது. மயக்க மடைந்த ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும் கைது நடவடிக்கையை புகைப்படம் எடுக்க முயன்ற ஆசிரியர்களின் செல்போன்களை போலீஸார் பறித்துக் கொண்டனர். இதுதவிர பெண்களை, ஆண் போலீஸார் கைது செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் காமராஜர் சாலையில் திடீரென போராட்டம் நடத்தியதால், அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



