விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடவுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் இந்த விஜய் ஹசாரே போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ரிங்கு சிங் உள்ளிட்டோர் தாங்கள் சார்ந்த மாநில அணியில் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காயம் காரணமாக விலகி இருந்த ஸ்ரேயஸ் ஐயர் தற்போது பெங்களூரு மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 2-ம் தேதி அவர் ஜெய்ப்பூர் வருகிறார். ஜெய்ப்பூரில் ஜனவரி 3, 6-ம் தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் முறையே மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேச அணிகளுக்கு எதிராக மும்பை அணியின் சார்பில் அவர் களமிறங்குகிறார்.
விஜய் ஹசாரே போட்டிகள் முடிந்த பின்னர் ஜனவரி 11-ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இணைந்து கொள்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.





