கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கர்னாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார், வயலின் கலைஞர் குமரேஷ், வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
“இந்த ‘த்ரிபின்னா’ ஆல்பம், ஸ்வரங்களை பிரித்து, பின்னர் ஒன்றாக இணைக்கும் பழங்கால கர்னாடக இசைக் கருத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பகால கமகம் கருத்துகளில் வேரூன்றிய இந்த ஆல்பம், ஒரு ராகத்துக்குள் பல ஸ்வரங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை ஆராய்ந்து, இந்திய பாரம்பரிய சூழலில் விரிவான இசை அமைப்புகளை உருவாக்குகிறது.
இந்த அணுகுமுறையின் மூலம், இந்த ஆல்பம் ராகத்தின் வெளிப்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதோடு, பாரம்பரியமும் கற்பனையும் ஒரு பெரிய இசைக்களத்தில் இணையும் இந்திய சிம்பொனியை உருவாக்குகிறது. இந்த ஆல்பம் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கிறது” என்று கணேஷ் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.





