காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீரி மொழியில் பேசினார். சில நிருபர்கள் குறுக்கிட்டு, உருது மொழியில் பேசுமாறு வற்புறுத்தினர்.
அப்போது மெகபூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளியுங்கள். நமது மொழியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச கோருவீர்களா?” என்று கண்டித்தார்.
பேட்டி முழுவதும் காஷ்மீரி மொழியில் நிருபர்களிடம் அவர் உரையாடினார். மெகபூபா முப்தி கூறியதாவது: வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்தியாவிலும் காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் உமர் அப்துல்லா, அனைத்து மாநிலங்களுக்கும் அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.







