சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்தவரிடம் கேரள போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள் 2019-ல் கழற்றப்பட்டு, செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு செப்பனிடும் பணிக்காக நகைகளை ஒப்படைத்த போது எடை 42.8 கிலோவாக இருந்தது. செப்பனிட்ட பிறகு சென்னையை சேர்ந்த நிறுவனம் திரும்ப ஒப்படைத்தபோது எடையில் 4.54 கிலோ குறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து கேரள அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி எஸ்.சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில், 400 கிராம் தங்கத்தை எடுத்து, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், தங்க வியாபாரி கோவர்தன் மற்றும் ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ்பண்டாரி ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு அருகே ராம்நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனிடம் நேற்று கேரள மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு, அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர். ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில போலீஸார் எதற்காக விசாரணை நடத்தினர் என்று தெரியவில்லை. எந்த வழக்கு என்றும் சொல்லவில்லை. எனது பெயர், தொழில் குறித்து கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். அவர்கள் தேடிவந்த நபர் நான் இல்லை என்று விசாரணையில் தெரிவித்து விட்டேன்” என்றார்.







