முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்வாக தினம்’ என்று மத்திய அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. சிறந்த அரசியல் தலைவரான வாஜ்பாய், கவிஞராகவும் இருந்தார். அவருடைய நினைவாக கவிஞர் குமார் விஸ்வாஸ் கவிதை நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அவருடைய சிறந்த பேச்சை கேட்டு அங்கிருந்த பெண் ஒருவர் வாஜ்பாயைப் பார்த்து, “நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? அதற்கு பதில் எங்களுக்கு காஷ்மீரை கொடுத்து விடுங்கள்” என்று கேட்டார். அருகில் இருந்த எல்லோரும், வாஜ்பாய் என்ன பதில் சொல்வார் என்று ஆவலாக இருந்தனர்.
ஆனால், அந்தப் பெண் அப்படி கேட்டதும் சிறிதும் தாமதிக்காமல், “உங்களை திருமணம் செய்து கொள்ள நான் தயார். ஆனால், வரதட்சணையாக எனக்குப் பாகிஸ்தான் வேண்டும்” என்று வாஜ்பாய் பதில் அளித்தார். தனது அரசியல் எதிரிகளை அவர் கடுமையாக எதிர்த்துப் பேசினாலும், எல்லை மீறி பேசியதில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது வீர்பத்ர சிங் முதல்வராக பதவி வகித்தார். அவர் பங்கேற்ற கூட்டத்தில் வாஜ்பாயும் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் வாஜ்பாய் பேசும்போது, “இங்குள்ள அமைச்சர்கள் மிகவும் ஜென்டிலானவர்கள் (பத்ரா), ஆனால் வீரம்தான் (வீர்) இல்லை” என்று வீர்பத்ர என்ற முதல்வரின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு மிகவும் நகைச்சுவையாக விமர்சித்தார். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.







