‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் ‘இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு மலர்’ மற்றும் ‘இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா பாடல்கள் முழுத் தொகுதி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ஹனீபாவின் குடும்பத்தினரை கவுரவித்தார்.
ஹனீபாவின் ‘வரலாற்று சுவடுகள்’ புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் நூல்களுக்கான கருத்துரைகளை வழங்கினர்.
முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஏ.கே.முகம்மது ஹனீபா வரவேற்புரை வழங்கினார். நிறைவாக, இ.எம்.ஹனீபா நவ்ஷாத் நன்றி கூறினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழைப் பார்த்தபோது எனக்கு ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்தது.
ஒருபக்கம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்னொரு பக்கம் பேராசிரியர் அன்பழகன். இவர்களது தோளில் உரிமையோடு கைபோட்டுக் கொண்டு நடுவில் கம்பீரமாக நிற்பார் நாகூர் ஹனீபா. அந்த இரு ஆளுமைகளின் தோளில் கைபோட்டு நிற்கும் துணிச்சல், நட்புறவு யாருக்கும் இருக்காது.
அத்தகைய கம்பீரத்தின் அடையாளம்தான் நாகூர் ஹனீபா. நாகூரில் திமுக கிளையை தோற்றுவித்ததும் அவர்தான். ஒலிபெருக்கியே தேவையில்லாத குரல்வளம் அவருக்கு. `ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்று அவரது குரல் ஒலிக்காத திமுக நிகழ்ச்சியே கிடையாது.
கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கருணாநிதியின் தீரத்தை ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று பட்டிதொட்டி எல்லாம் கொண்டுபோய் சேர்த்தது அவரது குரல். உடலால் மறைந்தாலும், நம் உள்ளம், உணர்வில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஹனீபாவும், கருணாநிதியும் நகமும் சதையுமாக, நட்போடு பழகியவர்கள். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். இதைத் தவிர அவர்கள் இடையே வேறு எந்த வேறுபாடும் கிடையாது.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவரைக்கூட கேட்காமல் இசைக் கச்சேரியை அறிவித்து விடுவார் கருணாநிதி. எப்படி என்று கேட்டால் ‘நான் கச்சேரிக்காரன் அல்ல, கட்சிக்காரன்’ என்று ஹனீபா கூறுவார்.
பெரியார், அண்ணா, கருணாநிதியின் புகழ் உள்ளவரை, நாகூர் ஹனீபாவின் புகழும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி.க்கள்எம்.எம்.அப்துல்லா, அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







