உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதால் வழக்கை திரும்பப் பெற அம்மாநில அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக்(52) என்பவர், தனது வீட்டின் பிரிஜ்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து கடந்த செப்டம்பர் 28, 2015 இல் அவர் கொலை செய்யப்பட்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் இதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி இந்த வழக்கை முடித்துவைக்கக் கோரி உத்தரப் பிரதேச அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் நகரின் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி சவுரப் திவேதி, ‘‘உத்தரப் பிரதேச அரசின் மனு நிராகரிக்கப்படுகிறது. அரசின் முறையீடு ஆதாரமற்றது; பொருத்தமற்றது. வழக்கில் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதை அரசு தொடர வேண்டும். தேவைப்படும் சாட்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என அறிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் உத்தரவின் பேரில், கடந்த அக்டோபர் 15 இல் கவுதம புத்தர் நகர் நீதிமன்றத்தில் இந்த வாபஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அக்லாக்கின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஒரே கிராமத்தில் வசிப்பதாகவும், அவர்களுக்குள் எந்தப் பழைய பகையும் இல்லை என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
சம்பவ இடத்தில் ஐந்து தடிகளே கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனால் ஐந்து பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும், அவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் உபி அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு சிறார்கள் உள்ளிட்ட மொத்தம் 16 பெயர்களுடன் கடந்த டிசம்பர் 22, 2015 இல் குற்றப்பத்திரிகை தாக்கலானது. முக்கிய குற்றவாளிகளில் உள்ளூர் பாஜக தலைவர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் ராணா மற்றும் அவரது உறவினர் சிவம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு குறித்து அக்லாக்கின் மகனான தானீஷ் கூறுமையில், ‘நாங்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கிறோம், பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல முடிவதில்லை. எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காவல்துறைப் பாதுகாப்பு இல்லாததால், பல சமயங்களில் எங்களால் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை.
பலமுறை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க எங்களால் இயலவில்லை. சிலர் வேண்டுமென்றே எங்கள் வாக்குமூலங்களைத் திரித்துக் கூறினர்,’ என்று தெரிவித்தார். அக்லாக்கின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அக்டோபர் 6, 2015 அன்று கிராமத்தை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர்.

