‘இபிஎஸ் அரசியல் வாழ்க்கையின் முடிவுரை…’ – 100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் ஸ்டாலின் காட்டம்

0
16

 “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) பாஜக அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “விபி ஜி ராம் ஜி (VBGRAMG)-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பாஜக அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.

மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே… என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.

வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய யுபிஏ (UPA) அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பாஜக அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here