எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேலை உத்தரவாத நாட்கள் 100-ல் இருந்து 125 ஆக புதிய திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாநிலங்களுக்கான நிதிப் பங்களிப்பை உயர்த்தியிருப்பதுடன் வேலைக்கான உரிமை உள்ளிட்ட பல விதிகளை அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மக்களவையில் நேற்று முன்தினம் இம்மசோதா மீதான விவாதத்தில், மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வலியுறுத்தினர்.
இந்நிலையில் மக்களவையில் நேற்று இந்த மசோதா மீதான விவாதத்திற்கு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதில் அளித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, மசோதாவின் பிரதிகளை கிழித்தெறிந்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் பேரணி: இதற்கிடையில் புதிய ஊரக வேலை உறுதி மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையில் இருந்து ‘மகர் துவார்’ நுழைவுவாயில் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று கண்டனப் பேரணி நடத்தினர்.
‘மகாத்மா காந்தி என்ஆர்இஜிஏ’ என்ற பிரம்மாண்ட பதாகையை ஏந்தியபடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா காந்தி, திமுக எம்.பி.க்.கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மக்களிடமிருந்து வேலை செய்யும் உரிமையைப் பறிக்கிறார்கள். இதற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடைபெறும்” என்றார்.
பின்னர் ‘எக்ஸ்’ தளத்தில் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவுகளில் “தேசத் தந்தை மகாத்மா காந்தியை மோடி அரசு அவமதித்தது மட்டுமின்றி இந்தியாவின் கிராமங்களில் சமூக-பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த வேலைக்கான உரிமையையும் நசுஇந்தியாக்கியுள்ளது. ஆளும் சர்வாதிகார அரசின் இந்த கொடுங்கோன்மைக்கு எதிராக, நாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து வீதிகள் வரை போராடுவோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “இன்று நாடாளுமன்றம் ஜனநாயகப் படுகொலையைக் காண்கிறது. மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதன் மூலம், அவர்கள் ஜனநாயக விழுமியங்களையும், தேசத் தந்தையின் சித்தாந்தத்தையும் சிதைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.







