பொங்கலுக்கு மூவாயிரம்… போனஸாகப் பத்தாயிரம்! – கரன்சி திட்டங்களுடன் காத்திருக்கும் கட்சிகள்

0
14

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.

விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை அண்மையில் வங்கிக் கணக்கில் வரவுவைத்த திமுக அரசு, அடுத்ததாக இந்தப் பொங்கலுக்கு குடும்ப அட்டை தவறாமல் மூவாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலவரத்தைப் பொறுத்து இது ஐயாயிரமும் ஆகலாம் என்கிறார்கள். ஏற்கெனவே பெண்களுக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக, பொங்கல் பரிசின் மூலம் பெண்களின் போனஸ் ஓட்டுகளை பெறமுடியும் என கணக்குப் போடுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக-வும் இந்தப் பொங்கலுக்கு பிரதமர் மோடியை தமிழகம் அழைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி வீட்டில் கொண்டாடி மகிழ்வதை வழக்கமாக வைத்தி ருக்கும் பிரதமர், இம்முறை தமிழகத்திலும் பொங்கலை கொண்டாட முடிவு செய்திருக்கிறார்.

ஏற்கெனவே திருவள்ளுவர், பாரதியார் மீது கரிசனம் காட்டி வரும் பிரதமர், காசி தமிழ்ச் சங்கமம், தமிழர்களின் பழங்கால பெருமைகள், ராஜராஜ சோழனின் வீரம் என்று தமிழர்களின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பேசி வருகிறார். இந்த நிலையில், தேர்தல் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கலை தமிழகத்திலேயே கொண்டாடுவதன் மூலம் தமிழக மக்களுக்கு இன்னும் நெருக்கமாக முடியும் என நம்புகிறார்.

பிஹார் தேர்தலுக்கு முன்பாக, ‘முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்புத் திட்டம்’ மூலம், சுய தொழில் செய்வதற்காக சுமார் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்ததற்கும் ஆளும் கூட்டணி எதிர்பார்த்ததை விட கூடுதலான இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்கவைத்ததற்கும் இது முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.

இதை மனதில் வைத்து, “தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பிஹாரைப் போல அனைத்து மகளிருக்கும் சுய தொழில் தொடங்குவதற்காக தலா ரூ. 10

ஆயிரம் வழங்குவோம்” என்பது போன்ற அறிவிப்பை என்டிஏ கூட்டணி இங்கேயும் அறிவிக்கலாம். இம்முறை, திமுக-வை எப்படியும் வீட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக, அதற்காக எந்த எல்லைக்கும் போகும். அதனால் தேர்தல் நெருங்க நெருங்க 2 கூட்டணிகள் தரப்பில் இருந்தும் கவர்ச்சியான பல அறிவிப்புகள் வெளியாகலாம். அதேபோல், தேர்தலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கையிலும் ’தேனான’ அறிவிப்பு களை திமுக திணிக்கும். ஆளும் கட்சி கூட்டணியும் ஆண்ட கட்சி கூட்டணியும் தேர்தலுக்காக இப்படி ‘இனிப்பான’ திட்டங்களுடன் காத்திருக்கும் நிலையில், களத்துக்குப் புதியவரான விஜய்யும் இவர்களுக்கு நிகராக எதையாவது சொல்லாமலா போய்விடுவார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here