கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுவினரின் விற்பனை கண்காட்சியை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடப்பாண்டில் சுயஉதவிக் குழுவினரின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனையானதாக தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பண்டிகைக் காலங்களில் சிறப்பு விற்பனை கண்காட்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மதி சிறப்பு விற்பனை கண்காட்சியை நேற்று தொடங்கியுள்ளது.
இந்தகண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உணவுத் திருவிழாவை சிறப்பாக நடத்திய, மதுரை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் உணவு விற்பனையில் முதலிடம் பிடித்த சுயஉதவிக் குழுவுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த விற்பனை கண்காட்சி ஜன.4-ம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் 72 சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களின் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை ரூ.600 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிதியாண்டு முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ரூ.690 கோடிக்கு பொருட்கள் விற்பனையாகி இலக்கை விஞ்சிஉள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி நிதி இன்னமும் வரவில்லை. அதை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் தயாநிதி மாறன் எம்.பி. ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







