மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலையில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்டில் உள்ள சிறிய, பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட ஆந்திர மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அமராவதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக நாட்டில் அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 82.46-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், ஆந்திராவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.57 ஆக உள்ளது. வாட் வரி ரூ.21.56 பைசாவாக உள்ளது. இதுவே அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 78.05 பைசாவாக உள்ளது. இதில் வாட் வரி 77 பைசா வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.03 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 92.61 ஆகவும் உள்ளது. புதுவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.32 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.86.53 ஆகவும் உள்ளது.
இதுவே டெல்லியில், ரூ.15.40 பைசா வாட் வரியுடன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.94.77 பைசா மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.







