மாநகராட்சி பகுதியில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டு பிடிக்க மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். போதிய பாதுகாப்பு அளிக்காததால் ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள், வீட்டு உரிமையாளர்களால் விரட்டப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் பொதுமக்கள், குழந்தைகளுக்கு வளர்ப்பு நாய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மூர்க்க குணம் கொண்ட நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள், பராமரிப்பு செலவு அதிகரிக்கும்போது, அவற்றை சாலையில் விட்டுவிடுகின்றனர்.
இதை தடுக்க, வளர்ப்பு நாய்களை வீட்டில் பராமரிக்க உரிமம் பெறுவதை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. மேலும், குறிப்பிட்ட வளர்ப்பு நாயின் உரிமையாளரை கண்டறிய, மைக்ரோ சிப்களையும் பொருத்தி வருகிறது. அவற்றுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசிகளும் செலுத்தி வருகிறது.
சென்னை மாநகராட்சியிடம் இதுவரை, 1,05,556 வளர்ப்பு நாய்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
உரிமம் பெறுவதற்கான அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று முதல் உரிமம் பெறாமல் சாலைகளுக்கு அழைத்துவரப்படும் நாய்களை கண்டறிந்து அவற்றுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் உரிமம் பெறாதது, கழுத்து பட்டை அணியாமல் வெளியில் கொண்டு வந்தது என ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் இப்பணியில் 15 அமலாக்க குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. நவீன கருவி மூலம் நாய்க்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்கின்றனர்.
அதேநேரத்தில், செல்வாக்கு மிக்கவர்களின் வீடுகளுக்குள் இவர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களால் மாநகராட்சி அலுவலர்கள் மிரட்டப்படுவதும், விரட்டப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
போதிய பாதுகாப்பு இன்றி மாநகராட்சி சுகாதாரத்துறை இத்திட்டத்தை செயல்படுத்துவதால், அலுவலர்கள் சிரமத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுகின்றன.







